என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் விளையாட்டு"
- ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டேன்.
- எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது 28). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். பாலகிருஷ்ணா ஆன்லைன் விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்து வந்தார்.
இதனால் உறவினர்கள், நண்பர்களிடம் பணத்தை கடன் வாங்கினார். ரங்கா ரெட்டி கலெக்டர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணாவுக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை பணி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரத்தில் தன்னுடன் பணியாற்றும் போலீசாரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
பாலகிருஷ்ணா கழிவறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. போலீஸ்காரர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது பாலகிருஷ்ணா தன்னுடைய துப்பாக்கியை தொண்டையில் வைத்து சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொண்டையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு தலை வழியாக வெளியே வந்து கழிவறையின் மேற்கூரையை தகர்த்து இருந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாலகிருஷ்ணாவின் உடலை மீட்டனர். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது.
அதில் தான் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டேன். 3 பேரிடம் ரூ 2.80 லட்சம் கடன் வாங்கி திருப்பி தர முடியவில்லை.
மேலும் எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
என்னால் என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் பாதிக்கப்படக்கூடாது. இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் எழுதி இருந்தார்.
- உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்.
- ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஒன்பதாவது உயிர் ராமையா ஆவார். கடந்த 14-ஆம் தேதி தான் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதிநிறுவன பணியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த மூன்றாவது நாளில் அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு உயிர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் மாணவர் தனுஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.
- தற்கொலை குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:
கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ்குமார் (வயது23). தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது. இதில் அவர் பெரிய அளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ரம்மி விளையாடுவதற்கு பணம் இல்லாததால் தனுஷ்குமார், தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் கேட்டார். ஆனால் அவர் ரூ.4 ஆயிரம் மட்டும் உள்ளது என்று கூறி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்தார்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற தனுஷ்குமார் பின்னர் நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் மாணவர் தனுஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் தனுஷ்குமார் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சாய்குமார் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார்.
- தற்கொலை குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கேட்டு தோட்டம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சாய்குமார் (வயது 32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பண தேவை உள்ளது. அனுப்பி வைக்குமாறும் இல்லையென்றால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாக செல்போனில் பேசி உள்ளார்.
இந்தநிலையில் அவர் திருப்பூர் வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
- ஆன்லைனில் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது.
சென்னை:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் விவரங்கள்:
இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை. மேலும் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும். நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும். இவ்வாறு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் அரசாங்கத்தின் சார்பாக அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகிறார்கள்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
- டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.
- இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடந்தது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும். இது அமல்படுத்தப்பட்டு 6 மாதத்துக்குப் பிறகு இந்த முடிவு குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
- ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்று மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு, திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடியது குறிப்பிடத்தக்கது.
- மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
- புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில் இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக தெரிவித்தார்.
'புற்றுநோய்க்கான மருந்துகள், அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்காக உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
- 21-ந் தேதியில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன.
- ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும்.
சென்னை :
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த அந்த மசோதா மீது சில விளக்கங்களைக் கேட்டு அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.
எனவே அந்த சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைத்தது. இதுவும் சில நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் 21-ந் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டியின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இது, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள்-2023 என்று அழைக்கப்படும். 21-ந் தேதியில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம்-2022-க்கான சட்ட விதியாக இது ஏற்கப்பட வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் தங்களின் பெயரை பதிவு செய்தல், இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ஒரு லட்சம் கொடுத்து, பெயர் பதிவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பெறலாம்.
இந்த விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதையோ அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கும் நடவடிக்கையையோ அதை கொடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். நிராகரிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
தவறான தகவல்களை கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டால் அதற்கான விளக்க நோட்டீசை ஆணையம் அளிக்க வேண்டும். அந்த நோட்டீசுக்கு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு நியமிக்கும். அவர்கள் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையிலோ, இதில் எது முதலாவது நேரிடுகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்கள். அவர்களுக்கு மறுபணி நியமனம் கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உண்மையான பணத்தை கையாளும் விளையாட்டுக்கு அனுமதி இல்லை.
- பந்தயம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது.
புதுடெல்லி
ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப ராஜாங்க மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேற்று வெளியிட்டார். அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பல்வேறு சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் (எஸ்.ஆர்.ஓ.) இருக்கும். கட்டமைப்புகள் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அனுமதியை அவை முடிவு செய்யும்.
பல்வேறு தனியார் நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறை அமைப்புக்கான மாதிரியை அளித்துள்ளன. இது குறித்து அவற்றுடன் விவாதிக்கப்படும். சுய ஒழுங்குமுறை அமைப்பினை அரசு அறிவிக்கும். இது தன்னாட்சி அமைப்பாக இருக்கும். நாங்கள் 3 சுய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் தொடங்குவோம்.
உண்மையான பணத்தை கையாள்கிற ஆன்லைன் விளையாட்டுகளும், பந்தயம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது.
பணம் சேகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கே.ஒய்.சி. என்னும் வாடிக்கையாளர்கள் பற்றிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவ்வப்போது தவறான தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
இதுபற்றி மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, "ஆன்லைனில் மத்திய அரசு பற்றிய தவறான தகவல்களை வெளியிடும் பிரச்சினையில், மத்திய அரசு ஒரு நிறுவனத்தை எங்கள் அமைச்சகம் மூலம் அறிவிக்க முடிவு செய்துள்ளது. அந்த அமைப்பு, ஆன்லைனில் உள்ள அனைத்து உள்ளடக்க அம்சங்களையும் சரிபார்க்கும்" என தெரிவித்தார்.
- வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
- தனிமையில் இருந்த யோகேஸ்வர பாண்டியன் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கல்வி கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது. இங்கு விருதுநகரை சேர்ந்த மதிமுத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் (வயது38). உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் காட்பாடி வி.ஜிராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். அதனை ஈடு கட்டுவதற்காக வங்கியில் கல்வி கடன் வாங்கிய மாணவ மாணவிகள் தவணை செலுத்திய இன்சூரன்ஸ் பிரீமியம் பணம் மற்றும் சிலரின் கல்விக் கடனை கையாடல் செய்து அந்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் தனது 2 வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.
இது பற்றிய தகவல் தெரியவந்ததும் வங்கி மேலாளர் சிவக்குமார் ஆய்வு செய்தார். அப்போது யோகேஸ்வரபாண்டியன் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 137 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 கையாடல் செய்தது தெரிய வந்தது.
புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வர பாண்டியனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் நல்ல குடும்பப் பின்னணியில் உள்ளவர். இவருடைய மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
தனிமையில் இருந்த அவர் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். முதலில் சிறிய அளவில் பணத்தை செலுத்தினார். பின்னர் விட்ட பணத்தை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக பெரிய தொகைகளை செலுத்த ஆரம்பித்தார்.
ஆன்லைனில் மூழ்கி அடிமையான அவர் மீள முடியாமல் வேலை பார்த்த இடத்திலும் பணத்தை கையாடல் செய்ய துணிந்தார். அதன்படி வாங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ.34 லட்சம் கையாடல் செய்து ரம்மி விளையாடியுள்ளார்.
அந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் அவர் தனது சொந்த பணம் ரூ.10 லட்சம் ரம்மி விளையாட்டில் இழந்ததாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் ரூ.45 லட்சம் வரை அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்.
தான் தவறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தவறுக்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்ன செய்வது என அவர் மனம் வருந்தினார்.
தற்போது அவரது வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டு விட்டது. நல்ல நிலையில் இருந்த அவர் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ரம்மி விளையாட்டு போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.
- ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர்.
- தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
சென்னை:
40 பேரின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க மறுக்கும் கவர்னர் ரவியை கண்டித்து சென்னை மிண்ட் மணிகூண்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
போராட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
40-க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை தமிழக கவர்னர் ரவி நிலுவையில் வைத்து சூதாட்ட முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணவ போக்குடன் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர். தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்குள் 12 பேர் இறந்து உள்ளனர்.
பலர் லட்சாதிபதி ஆகும் என்ற கனவில் பல லட்சங்களை இழந்து உள்ளனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு பொதுமக்களிடம் நடத்திய கருத்து கேட்பு ஆய்வு அறிக்கையில் ஆன்லைன் ரம்மிக்கு உடனடியாக தடை சட்டம் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் அமலாகும் வரை கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்